காலியான பச்சை சாலை!








''தேடு தேடு கிடைக்கும் வரை அல்ல உன்னை நீ இழக்கும் வரை..!

                                                                                            - ஒரு மகா ஞானி யோசித்தது

பச்சையும் அமைதியும் எப்போதும் ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பது. சத்தம், புகை, சண்டை, தோல் நிறங்கள், சதைகள் மத்தியில் வாழும் மனிதர்கள் அமைதியான பயமற்ற பயணத்தை மேற்கொள்வது இல்லை. இதனால் தான் மனிதன் கடைசிவரை தனது வாழ்க்கையின் உணர்வை அடையாமலேயே இறக்கிறான்.

வாழ்க்கை என்பது அடைவதற்கா அல்லது உணர்வதற்கா என்ற தெளிவு நமக்குள் பிறக்க வேண்டும். சிறு வயது முதல் ஒன்றை எவ்வாறெல்லாம் அடையலாம் என மனிதர்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்களே தவிர உணர பழகவில்லை. உணர்வதில் தான் வாழ்க்கை இருக்கிறது என்ற உண்மையை அறியாமலேயே தங்களது பயணத்தை முடித்துக்கொள்ளும் மனிதர்கள் தான் இங்கு அதிகம்.  

சாலையின் இருபுறமும் மரங்கள் சூழ காற்றுடன் மெய் கலந்து அமைதியுடன் உயிர் கலந்து தன்னையும் மறந்து எல்லையற்ற ஆனந்தத்தை பெரும் அந்த நொடி தார் சாலையின் நடுவே மூடாமல் கிடந்த சிறு குழி மண்ணில் இருந்து உலகத்தை எட்டிப்பார்க்கும் இரு இலை செடியின் உணர்வாக இருக்கும்.

வெறி பிடித்து தேடும் மனிதர்களுக்கு தனது பயணத்தின் முடிவில் தான் வெறி விலகும், நேற்றுவரை தலைமை பதவியில் இருந்தவர், இன்று திடீரென புற்றுநோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு, எந்த சாலையில் மூதாட்டியை கடக்கவிடாமல் தனது காரை வேகமாக செலுத்தினாரோ, அதே சாலையில் உயிருக்கு போராடும் மனிதராக அவசர ஊர்தியில் இருக்கிறார். அவர் இதுவரை கேட்டு வந்த எல்லா வாகங்களின் சத்தமும் மறைந்து அந்த மூதாட்டின் கைத்தடி சாலையை இடிக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது.



இப்போது சொல்லுங்கள் எது வாழ்க்கை...! 

No comments