நாட்டை ஆண்ட நாடார்!
காமராஜர் தன்னை நாடார் சமூதாயத்தின் பிரதிநிதியாக நினைத்தாரா என்று தெரியாது, அது அவரை சுற்றி இருந்தவர்கள் மட்டுமே அறிந்த ஒரு ரகசிய செய்தி அது. இந்த கட்டுரையின் நோக்கம் காமராஜரை பற்றிய அறிய பல செய்திகளை சொல்வது அல்ல. காமாரஜரை பற்றிய எனது கருத்து.
தமிழக மக்கள் காமராஜரை தோற்கடித்தது உண்மையா?
தமிழகத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்த காமராஜரை தமிழக மக்கள் தேர்தலில் தோற்கடித்துவிட்டனர் என சொல்வது வழக்கம். ஆனால் அதில் பிழை இருக்கிறது. 1954ம் முதல் 1963ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த காமராஜர், காங்கிரஸ் கட்சியை காப்பாற்றப்போவதாக அறிவித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜாஜியின் சீடரான பக்தவச்சலத்திடம் ஆட்சியை ஒப்படைத்தார். பக்தவச்சலத்தின் ஆட்சியில் நடந்த சீர்கேடுகள் திமுகவுக்கான அதிகாரக்கதவை 1967ம் ஆண்டு திறந்தது. விலைவாசியை கட்டுப்படுத்தாதது, ஹிந்தியை திணித்தது, அதனால் ஏற்பட்ட போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிய பக்தவச்சலத்திற்கு பாடம் புகட்டினர் தமிழக மக்கள். காமராஜரை தோற்கடிக்க வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கவில்லை. ஏன் அண்ணாவும் நினைக்கவில்லை.
உண்மையில் காமராஜர் காங்கிரஸ் முதலமைச்சரா.!
குலக்கல்வி திட்டத்தை திணித்த ராஜாஜிக்கு எதிராக போராட்டப்படை கட்டிய பெரியார், அதில் வெற்றி கண்டார். கட்சி பணிகளில் மட்டுமே தீவிரமாக கவனம் செலுத்து வந்த காமராஜர், ஆட்சி பக்கம் தலைக்காட்டாமல் இருந்தார். இருப்பினும் தமிழக முதலமைச்சர் பதவியை காமராஜரிடம் திணித்தது பெரியார். காமராஜர் மூலம் இரண்டு விஷயத்தை சாதிக்க நினைத்தார் பெரியார். ஒன்று ராஜாஜி மற்றும் அவரது கூட்டாளிகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி வைப்பது. இரண்டாவது சாதியை ஒழிக்க போதுமான அளவு காமராஜரை பயன்படுத்திக் கொள்வது. இந்த இரண்டிலுமே பெரியார் வெற்றி கண்டார் காமராஜர் வாயிலாக. அப்படி பார்த்தால் தந்தை பெரியாரால் முதல்வராக்கப்பட்ட காமராஜர் எப்படி காங்கிரஸ் முதலமைச்சராக இருக்க முடியும்.
காந்தி, அம்பேத்கருக்கும்., அண்ணா, காமராஜருக்கும் இருக்கும் ஒற்றுமை!
காந்தியை இந்தியாவின் அடையாளச் சின்னமாக தூக்கிப்பிடித்த சிலர், அதை அனைவரையும் ஏற்க வைத்து வெற்றி கண்டனர். இதனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கான தலைவராக இருந்த, தனது அறிவாற்றலால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பை வழங்கிவிட்டு சென்ற அம்பேத்கர் நான்காம் கட்ட அரசியல் தலைவராக, திண்டத்தகாத தலைவராக திட்டமிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டார். அதேபோல தான் 9 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட காமராஜரையும், இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்த அண்ணாவையும் ஒப்பிட்டு தமிழகத்தில் ஒரு சிலர் கதை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். காமராஜரை தூக்கிப்பிடித்து திராவிட கட்சிகளின் முதலமைச்சர்களின் பங்களிப்பை மட்டுப்படுத்தும் வேலைகளும் நடந்து வருகிறது. பச்சை தமிழர் காமராஜர் என விழா கொண்டாடும் தமிழ் தேசிய இயக்கங்களுக்கு ஒரு செய்தி. மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து இறந்துபோன சங்கரலிங்கனார் காமராஜர் ஆட்சிக்கு எதிராக தான் போராடி மாண்டார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டியவர் தெலுங்கர் அண்ணாதுரை.
தலைப்பில் நாடார் தேவையா?
காமராஜரை அடையாளம் காட்டியது பெரியார். நாடார் சமூதாய மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் பள்ளிகளை திறக்கவில்லை காமராஜர். ஆனால் திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காமராஜ நாடார் தனியார் பள்ளிகள் ஏராளமாக இருக்கின்றன. நாடார் சங்கங்களும், அந்த சமூதாயத்தை சேர்ந்த தலைவர்களும் சாதிய அடையாளத்தை அடித்தளமாக கொண்டு காமராஜரை தூக்கிப் பிடிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். இதன் ஆபத்து பின் வரும் தலைமுறையினர் காமராஜரை முத்துராமலிங்க தேவரை போல சாதிய தலைவராக பார்க்கும் அபாயம் இருக்கிறது.
இதற்கு என்ன தான் தீர்வு!
2 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்தி விட்டு, ஒருவர் தனது சாதிய பெயரை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற சூழல் வர வேண்டும். சாதி பெயரை பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் தனியாக பாவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கருப்பு நிற குடும்ப அட்டை அளிக்க வேண்டும். அவர்களது இல்லத்திற்கு அரசே நாடார் இல்லம் என பெயர் பலகை வழங்க வேண்டும். சாதியை நாங்கள் கடைபிக்கவில்லை எனக் கூறிய ஆழ்மனதில் சாதிய எண்ணம் அப்படியே நீடித்து சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறிப்பதற்கு முன்பாக, சாதி அடையாளத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். இவர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை கொண்டு படிப்பகங்களை திறக்க வேண்டும். அறிவை விட சாதியை வீழ்த்த வேறு ஆயுதம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வருவேன்!!!

No comments
Post a Comment