மனித உறவுகள்: நவீன யுக துறவரம்-2!
புத்தம் தலையெடுத்த பிறகே துறவரம் தொடர்பான புரிதல் சாமானியர்களுக்கு ஏற்பட தொடங்கியது. எதையும் சொந்தம் கொண்டாடாமல், மனித உறவுகளால் ஏற்படும் கவலையில் சிக்காமல், அர்த்தமற்ற எலிப் பந்தயத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல், தன்னை சுற்றி அரங்கேறும் நிகழ்வுகளை சாட்சியாக பார்க்கும் ஒரு நிலையே துறவரம் என எளிமையான அர்த்தம் கொள்ளப்படுகிறது.
மனித உறவுகள்:
மனித உறவுகள் மிகவும் சிக்கலானவை. அதனை தீர்கமான மதியுடன் நோக்க வேண்டும். இன்றைய நமது உறவுகள் எல்லாமே ஒருகட்டத்திற்கு பிறகு சார்பு என்ற நிலையில் மையம் கொள்கிறது. அடிப்படையில் சார்பு என்பது தனிமனித சுதந்திரத்தை தடுக்கக்கூடியது. எப்போதுமே உறவு என்பது இருவருக்கும் இடையிலான ஒன்றாக தான் இருக்கும். இரு உறவுகளுக்கு மத்தியில் புரிதல் ஏற்படும் முன்பே சார்பு என்பது தொடங்கிவிடுகிறது.சார்பு என்பதே உறவுகளில் ஏற்படும் எல்லா பிரச்சனைக்குமான மூல காரணம்.சார்பு தான் அன்பு என்ற தவறான கருத்தும் பரவலாக நிலவுகிறது.
சார்பு, பெரிய பிரச்சனையாக இல்லாமல் இருக்க காரணம், அது பெரும்பாலும் வெளிப்படுவதில்லை. உறவால் ஏற்படும் சார்பு மேலோட்டமான பாதுகாப்பை உண்டாக்கக்கூடியது. பாதுகாப்பு உணர்வுடன் கட்டி எழுப்பப்படும் உறவு ஏராளமான எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது. உறவில் இருக்கும் இரண்டு பேருக்கு மத்தியில் ஏற்படும் எதிர்பார்ப்புகள் சமூக சிந்தனையால் கட்டமைக்கப்பட்டது.
சார்பு ஏற்படுத்தும் பாதுகாப்பு உணர்வு, தனிமை அச்சத்தை நீக்கி, பல வகை அச்சத்தை தரக்கூடியதாக இருக்கிறது. தனிமனிதன் தனது சுதந்திரத்தை மறந்து விட்டு சார்பு என்ற வலைத்திற்குள் சிக்கும்போது அவனது மனம் ஒரு சின்ன இடத்தை சுற்றியே எண்ணங்களை வெளிப்படுத்த தொடங்கும். அவ்வாறு வெளியாகும் எண்ணங்கள் சார்பால் கட்டி எழுப்பப்பட்டுள்ள உறவில் சந்தேகங்களை ஏற்படுத்தி, அதுவே விரிசலுக்கும் காரணமாகிவிடும்.
சார்பு இல்லாமல் ஒரு உறவை அமைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அமைதியான மனநிலை மற்றும் தெளிவான பார்வை என்பது சார்பற்ற உறவுக்கு அவசியமாகிறது. ஒருவர் உங்களிடம் பேசும்போது எவ்வித சார்பும் இன்றி, உங்களது கருத்தை கொண்டு அதனை பரிசோதிக்காமல் காண்பது அவசியமாகிறது. அதேபோல பிறரது பேச்சில் முழுமையாக மயங்கி நம் சிந்தனையை மழுங்கடிப்பதும் தவறு.
எவ்வித சார்புக்கும் உட்படாமல், உணர்வு கிளர்ச்சிக்கு ஆளாகாமல், சலிப்பு தட்டாமல் என்ன இருக்கிறதோ, என்ன சொல்லப்படுகிறதோ, அதை அதன் தன்மையில் இருந்து பார்ப்பதே, பார்த்தல் எனப்படும்.
இதனை தங்களது அன்றாட வாழ்வில் கடைபிடிப்பவர்களை பிரச்சனைகள் நாடாது. எவ்வகையான பிரச்சனையும் அவர்களை பாதிக்காது. எவ்வாறு பிறரது பிரச்சனைகளை வெளியில் இருந்து பார்க்கிறார்களோ, அதே கண்ணோட்டம் தங்களது சொந்த வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் ஏற்படும். இதன்மூலம் மனம் எப்போது அமைதியாக இருக்கும்.
No comments
Post a Comment